அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ்!

0
153

“விவசாயப் பொருளியல்” (அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ்) எனப்படுவது விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தை சேவை நோக்கோடு மட்டுமல்லாமல் வணிக கண்ணோட்டத்துடனும், பொருளை ஈட்டும் வகையில் நில நிர்வாகம், வேலையாட்கள், முதலீடு மற்றும் சிறு பண பரிமாற்றங்களின் அடிப்படை போன்றவற்றால் அவர்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்பட வைப்பதற்கு உதவுவதற்கான படிப்பே விவசாயப் பொருளியலாகும்.
விவசாயப் பொருளியல் படிப்பு பொருளாதார வளர்ச்சி, வளர்ச்சிக்கான கட்டமைப்பு, விவசாய மேலாண்மை போன்ற பெரும் அலைவரிசையை உள்ளடக்கமாகக் கொண்டது. மேற்கண்ட அடிப்படை அம்சங்களோடு நில அளவீடுகள், திட்டமிடல், விவசாய கொள்கைகள், இந்திய விவசாயத் துறையின் வளர்ச்சியில் இருக்கும் பிரச்னைகள் ஆகிய பாடத்திட்டங்களும் அளிக்கப்படுகிறது.
படிக்கும் மாணவர்கள் பசுமைப் புரட்சியை அறிந்து கொள்ளும் விதமாக பசுமைப் புரட்சியின் விளைவால் விவசாயத்திற்கு விளைந்த நன்மைகள், தீமைகள், விவசாயப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை பற்றியும் பாடங்கள் அளிக்கப்படுகிறது. ஊரக வளர்ச்சியில் விவசாயம் பெரும் பங்கு வகிக்கிறது. விவசாயத்தின் வழியாகத் தான் ஊரக வளர்ச்சிக்கான செயல் திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதனால் ஊரக வளர்ச்சிப் பற்றியும் பாடங்கள் அளிக்கப்படுகிறது.
மேலும் உலக வணிக அமைப்புகளின் கொள்கைகள், அதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள், பயன்கள், காலநிலையால் ஏற்படும் விளைவுகள், அளவீடுகள் பற்றியும் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது.
படிக்கும் மாணவர் தனது இரண்டாம் வருடத்தில் ஆராய்ச்சி கட்டுரைக்காக சிறப்புப் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பிரிவு பொருளியல், விவசாயப் பொருள் விற்பனை, திட்டமிடல், கொள்கைகள், நிதி மற்றும் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட இயற்கையின் வளமான வாய்ப்புகளை உபயோகமான முறையில் எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
விவசாயப் பொருளியல் படிப்பை முடித்தவுடன் விவசாய விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ‘விவசாய ஆய்வுப் பணிகள்‘ தேர்வு எழுதி விஞ்ஞானி பதவியைப் பெறலாம். சில வருட பணி அனுபவத்திற்கு பிறகு தனது திறமையான வேலையின் மூலம் முதல் நிலை விஞ்ஞானியாக பதவி உயர்வு பெறலாம்.
பெரும்பாலான பட்டதாரிகள் நிதி நிறுவனங்கள், வங்கித்துறை, ஊரக வளர்ச்சிக்கான நிறுவனங்கள், அரசு சாரா சேவை அமைப்புகள், கல்வி நிலையங்கள், ஆய்வு மற்றும் வளர்ச்சி மையங்கள், விற்பனைப்பொருள் சந்தை போன்றவற்றில் பணி வாய்ப்பை பெறுகின்றனர்.
இளநிலை படிக்கும்போது விவசாயத்தை பற்றிய அடிப்படை அறிவை மாணவர்கள் அறிந்துகொள்கின்றனர். முதுநிலை முடிக்கும்பொழுது படித்த பட்டதாரி தொழில்நுட்ப அறிவு, பயிரிடுதல், சந்திக்கக்கூடிய பிரச்னைகள் போன்றவற்றை பற்றி ஆராயக்கூடிய அறிவைப் பெறுகின்றனர். இதன் மூலம் விவசாயம் சார்ந்த தொழில்களை ஆரம்பிக்கக்கூடிய வாய்ப்புகளைப் பெறுகின்றனர்.
விவசாயத் துறையில் ஓவ்வொரு பணிக்கும் ஓவ்வொரு விதமான சவால்கள் இருக்கின்றன. அரசுப் பணிகளில் வேலை பார்ப்பதற்கு ஆய்வு செய்யும் திறமை அவசியம். விவசாய விறபனைத்துறை என்பது தற்பொழுது பலவீனமான துறையாக இருக்கிறது. எனவே விற்பனைத் துறையில் பணி பெறுபவர்கள் கடுமையாக உழைக்க தயாராக இருத்தல் வேண்டும். விவசாயிகளின் நிலம், காலநிலை, தேவைகளை உணர்ந்து பொறுமையாக புரியும் வகையில் தீர்வினை அளிப்பதற்கு தயாராக இருத்தல் வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயத் துறையில் இருக்கும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையை குறைத்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த உற்சாகமாக உழைக்க தயாராக இருத்தல் வேண்டும்.
படிப்பின் பெயர்: எம்.எஸ்சி. அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ்
இந்த படிப்பில் சேருவதற்கு இளநிலையில் பி.எஸ்சி. அக்ரிகல்ச்சர் அல்லது பி.எஸ்சி. ஹோர்டிகல்ச்சர் அல்லது பி.எஸ்சி. பாரஸ்ட்ரி போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும்.
படிப்பை வழங்கும் கல்லூரிகள்
யூனிவர்சிட்டி ஆஃப் அக்ரிகல்ச்சுரல் சயின்சஸ், பெங்களூர்.
ஜி.பி. பன்ட் யூனிவர்சிட்டி ஆஃப் அக்ரிகல்ச்சர் அன்ட் டெக்னாலஜி, பன்ட்நகர்.
டாக்டர் யஷ்வந்த் சிங் பர்மார் யூனிவர்சிட்டி ஆஃப் ஹோர்டிகல்சர் அன்ட் பாரஸ்ட்ரி, நானி.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here