வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்!

0
127

பெரும் வியாபாரி ஒருவன் தன்னுடைய வியாபாரத்தைச் சிறப்பாக நடத்தி வந்தான். ஆசை யாரைவிட்டது ? அவனுக்குப் பணத்தாசை அதிகமாகி பல்வேறு தொழில்களில் தனது மூலதனத்தினைச் செலுத்தினான். பல தொழில் செய்த அவன் ஒரு தொழிலிலும் சரிவர கவனம் செலுத்த முடியாமல் எதிலும் முன்னேற முடியவில்லை தொழில்கள் அனைத்தும் நலிந்தன.
கடைசியில் ஒரு மகா முனிவர் பல மாதங்களாக ஒரு மரத்திற்குக் கீழே தவம் செய்து கொண்டு இருந்தார். அவரிடம் ”முனிவரே தங்களைப் பார்த்தால் மாபெரும் வலிமை படைத்தவர்போல் உள்ளீர் நான் வாழ்வதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்” என்றான்.
அந்த முனிவர் அவனிடம்,”மனிதா நான் உனக்கு என்ன செய்யவேண்டும் ? என்றார்.
அதற்கு அவன், ”பல தொழில்கள் செய்து வந்தேன். இருந்தாலும் என்னால் முன்னேற முடியவில்லை” என்றான்..
பிறகு ?
”எனக்கு ஒரு தொழில் செய்வதற்கு முதலீடு வேண்டும்” என்றான்…
எவ்வளவு வேண்டும் ? என்றார் முனிவர்..
அதற்கு அவன், ”ஒரு லட்சம் இருந்தால் எனது குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வேன்” என்றான்.
மாமுனிவர்,”ரூபாய் ஒன்றும் பெரிதல்ல…உன் வலப்புறக் கையை வெட்டிக் கொடு? ஒரு லட்சம் தருகிறேன்”என்றார்
அதற்கு அவன்,” வலக்கையைக் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது? வேறு ஏதாவது கேளுங்கள் ”என்றான்…
அதற்கு முனிவர், ”சரி உன் இரண்டு கண்களையாவது கொடு இரண்டு கோடி தருகிறேன் ” என்றார்..
அதற்கு அவன், ”ஐயா சாமி எனக்கு ஒன்றுமே வேண்டாம்” என்று ஓடினான்..
நில் என்றார்.
என்ன என் கிட்னி வேண்டுமா ? என்றான்
உங்களைப்போய் கேட்டேன் பாருங்கள். என்னை நான் பார்த்துக் கொள்கிறேன். போய் வருகிறேன். என்று ஓடி கீழே விழுந்தான்.
முனிவர் உரக்கச் சிரித்தார்.
முனிவர்,” ஏ ! மனிதா கொஞ்சம் எழுந்து நில். நான் சொல்வதைக் கேள்..என்றார்..
உடனே அவன்.”நின்றான் ”
அந்த முனிவர்,”உன் கைகள் இரண்டும் இரண்டு லட்சம் ..உன் கண்கள் இரண்டும் இரண்டு கோடி. உன்னிடம் இருப்பது பல கோடிகள். முதலில் உன்னிடம் உள்ள பெருஞ்செல்வத்தை நீ உன்னை நம்பு. பிறகு கடவுள், சாமி, என்னைப் போன்ற முனிவர்களை நம்பு.
முதன்முதலில் நீ எப்படி தொழில் தொடங்கினாய் என்பதை நினைத்துப்பார்.
என்னைப் போன்ற முனிவர்களை நம்பியா தொடங்கினாய் ?
பசித்தது தேடினாய்…
கிடைத்தது.
கிடைத்ததை ருசித்தாய்.
ருசித்ததில் வேறுபட்டாய்.
வேறுபாட்டில் வெற்றிக்கொண்டாய்.
வெற்றி வெறியானது.
வெறி உன்னை வெறுங்கையாக்கியது.”
அவ்வளவுதான்
இப்போது மட்டும் ஏன் உன் கைகளை வெறுங்கை என்கிறாய் ?

”வெறுங்கை என்பது மூடத்தனம் உன் விரல்கள் பத்தும் மூலதனம்” என்பார்கள்.
“தன்னம்பிக்கையே வாழ்க்கை”
அதனால் சொல்கிறேன்
உன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து யாரும் உன்னைத் தீர்மானிப்பதில்லை
நீ இதுவரை என்ன செய்துள்ளாய் என்பதைப் பார்த்துத்தான் உன் தகுதியைத் தீர்மானிக்கிறார்கள்
இதுவரை பல வியாபாரங்களையும் பெரும் தோல்வியையும் சந்தித்தவன் நீ…
நீதான் வெற்றி பெற தகுதியானவன்.
மீண்டும் பசியில் இருக்கிறாய்… இந்தப் பசி என்றும் தீராது மரணம் ஒன்றுதான் இந்தப்பசிக்கு முற்றுப்புள்ளி அதுவரை நீ பெறும் அனுபவம் எல்லாம் உன் வெற்றிக்கான தொடர்புள்ளி !
வீழ்வது வெட்கமல்ல மனிதனே வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம். உயிர் என்றவுடன் எப்படி ஓடினாய் ! இனி நீ செய்யப்போகும் தொழிலையும் உன் உயிர் எனக் கருது வெற்றியை நோக்கி நீயும் ஓடுவாய் !
”வீழ்வதும் இயற்கை எழுவதும் இயற்கை”
நிமிர்ந்து நில் ! துணிந்து செல் ! உன்னை நீ வெல் !
என்றார் அந்த முனிவர். உடலளவில் விழுந்தவன் அவனாக எழுந்தான்.
உள்ளத்தளவில் விழுந்த அவன் அவரால் எழுந்தான்
நீங்கள் ?


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here